வீட்டில் விளக்கேற்றும்போது, எந்த வகை திரி மற்றும் எண்ணெயை உபயோகிக்கலாம் என்கிற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்கிறார்களே... எந்த எண்ணெய் கொண்டு, என்ன மாதிரியான திரியை வைத்து விளக்கேற்ற வேண்டும் என்று தவித்து மருகுபவர்கள் ஏராளம்.
முதலில் ஒரு விஷயம்...
காலையும் மாலையும் வீட்டில்... பூஜையறையிலும் வாசலிலும் விளக்கேற்றுவதே மிகப்பெரிய பலன்களைத் தந்தருளும் என்கிறது சாஸ்திரம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
பருத்தியில் இருந்து நூலெடுத்து, திரியாகப் பயன்படுத்தலாம். அதேபோல், நல்லெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெயைப் பயன்படுத்தலாம். விளக்கு நின்று நிதானமாக எரியவும், கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரவும் அவை உதவும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மற்றபடி, திரி மற்றும் எண்ணெய்க்கு மாற்றாக, மற்றவற்றைத் தேர்ந்தெடுப்பது சரியல்ல.
பல எண்ணெய்கள் விளக்கேற்ற வந்துவிட்டன. பல எண்ணெய்களின் கலவையும் வந்துவிட்டன. வெளிச்சத்துடன் கண்ணுக்கு இதமும் தருவது நல்லெண்ணெயும் இலுப்பை எண்ணெயும்தான் என்று போதிக்கிறது ஆயுர்வேதம்.
பலபொருட்களில் இருந்து எண்ணெயை உருவாக்க இயலும். ஆனால், ‘தைல யோனி’ எனும் பெயரில் ஆயுர்வேதம் சிலவற்றை அறிவுறுத்துகிறது. அவை, உடல் மற்றும் உள்ளத்துக்கு உகந்தவை என்கிறது.
எனவே, தீபத்துக்கு உகந்தது இந்த இரண்டு எண்ணெய்களே. இன்ன திரி, இந்த எண்ணெய் என்றெல்லாம் சிறப்புப் பயன்களும் பலமும் தனித்தனியே இல்லை. அப்படி இருப்பதாகச் சொல்வது, மிகைப்படுத்தி சொல்லப்பட்ட விஷயங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.
Comments
Post a Comment