பாவ - புண்ணியக் கணக்கு!’ - காஞ்சி மகான்


periyavaa


காஞ்சி மகா பெரியவா பொன்மொழிகளை ஏற்று, அவற்றை உணர்ந்து தெளிந்து வாழ்வோம்.


காஞ்சி மகா பெரியவா, நம் காலத்தில் வாழ்ந்த மகான் என்று போற்றிக் கொண்டிருக்கிறது சமூகம். வாழ்வியலையும் ஆன்மிகத்தையும் பக்தியையும் இல்லறத்தையும் சின்னச் சின்ன உதாரணங்களுடன் அருளியிருக்கிறார் காஞ்சி மகான்.  


காஞ்சி மகா பெரியவா அருளியவற்றை ஒருவர் ஏற்று, உள்வாங்கி, நடக்கத் தொடங்கினாலே, செம்மையான வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம். குழப்பமற்ற மனநிலையை அடைந்துவிடலாம்.


மகா பெரியவா, ‘ஒருவரைப் புகழ்ந்து பேசுவதற்கும் கட்டுப்பாடு மிக மிக அவசியம். ஒரேயடியாகப் புகழ்ந்தால், மனதில் அகங்காரம் உண்டாகிவிடும்’ என அருளியுள்ளார்.
அதேபோல், ‘பொழுதுபோக்கு என்ற பெயரில், நேரத்தை வீணாக்கக் கூடாது. மாறாக, பிறருக்கு சேவை செய்வதற்கு நாம் முன்வரவேண்டும். அப்படிச் சேவை செய்வதுதான், உண்மையான, பயனுள்ள பொழுதுபோக்கு’ என்கிறார்.


சிந்தனை குறித்தும் எண்ணங்கள் குறித்தும் மகா பெரியவா நமக்கு விளக்கியுள்ளார். ‘’எண்ணத்தால் நாம் தூய்மையாகவேண்டும். அப்படி எண்ணத்தால் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்குத்தான் வழிபாடு செய்கிறோம். நாம் செய்யும் பூஜைகளால், கடவுளுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. அந்த வழிபாடு, நம் மனத்தைத் தூய்மைப்படுத்துவதற்குத்தான்!’’ என அருளுகிறார்.


‘’நமக்கு ஒரு துன்பம் வந்தால், யார் யாரையோ சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், மனதால்தான் எல்லாவிதமான துன்பங்களும் உண்டாகின்றன.’ஆசைப்படாதே’ என்று இந்த மனதை இழுத்துப் பிடித்து நிறுத்துவதற்குத்தான் மெனக்கெடுகிறோம். ஆனால் இது சுலபமில்லை’ என்கிறார்.


பாவ - புண்ணியம் குறித்து சொல்லும்போது, ‘ஒன்றை மட்டும் நாம் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும். செய்த பாவமும் புண்ணியமும் அத்தோடு முடிந்துவிடாது. செய்த பாவமும் அதற்கான தண்டனையும் செய்த புண்ணியமும் அதற்கான நன்மையும் நம்மை ஒருநாள் வந்துசேரும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். மறந்துவிடாதீர்கள்’ என நமக்கு அருளியுள்ளார் காஞ்சி மகான்.


Comments