வீழ்பவர் எழும் வாழ்வியல் தத்துவம்...


tanjavur-temple


எதற்கெடுத்தாலும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரி தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு இருக்காதே, வாயைத் திறந்து பதில் சொல் என்று குழந்தைகளை பெற்றோர்கள் கண்டிப்பார்கள். ஒரு விஷயத்தை, பதிலை, விளக்கத்தை வார்த்தைகளில் விளக்குவதை விட உண்டு, இல்லை என சிறு தலையசைப்பில் சொல்வது என்பது சொல்பவர்களுக்கும் எளிது, புரிந்துகொள்பவர்களுக்கும் எளிதில் விளங்கும்.


இவ்வாறு கேள்வி, பதில், விழும் எழும் வாழ்க்கை எனப் பலவற்றை நமக்கு இன்றளவும் சொல்லாமல் சொல்கின்றன தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள். தஞ்சாவூர் பொம்மை, தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என அழைக்கப்படும் இப் பொம்மையானது களி மண்ணால் செய்யப்படுவதாகும். தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் இப்பொம்மை தஞ்சாவூரின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுபவை என்றால் மிகையல்ல.


காவிரிக் கரையோர களிமண் கொண்டு செய்யப்படும் இப்பொம்மைகள் உலகப் புகழ் பெற்றவை எனலாம். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை எந்தப் பக்கம் சாய்த்தாலும் கீழே விழாமல் ஆடும். அதற்கான தனிச்சிறப்புடன் இந்த பொம்மையின் அடிப்பாகம் அமைக்கப்பட்டுள்ளது.


தலையாட்டி பொம்மை என்பது ‘ராஜா’ மற்றும் ‘ராணி’ ஆகிய இரண்டு வகை பொம்மைகளுக்குமான பொதுப் பெயராக உள்ளது. இந்த பொம்மைகள் அடிப்பகுதியில் பெரியதாகவும், எடையில் மிகுந்ததாகவும், மேற்புறம் குறுகலாகவும், எடை குறைவாக இருக்கும் விதமாகவும் உருவாக்கப்படுகின்றன. இதனால்தான் இப்பொம்மைகள் எந்தப் பக்கம் சாய்த்துவிட்டாலும் சாய்ந்து கீழே விழுந்துவிடாமல் மீண்டும் முன்னர் இருந்த அதே செங்குத்து நிலையிலேயே நிற்கின்றன. இது வாழ்வியல் தத்துவத்தை உணர்த்தும் செயல் என்பதை அறிவீர்களா?


ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகளைச் சந்தித்து மேலும் மேலும் கீழே செல்லும் நிலைக்குப் போனாலும் அத்தனையும் தன்னம்பிக்கை என்ற அருமருந்து இருந்தால் மீண்டும் எழுந்து விட முடியும் என்பதைத் தான் இந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் உணர்த்துகின்றன. மேலும், வார்த்தைகளில் சொல்ல முடியாதவைகளைக் கூட தலையசைப்பால் உணர்த்தி விட முடியும். இதனால், ஆர்ப்பாட்டமான பேச்சைத் தவிர்த்து ஆழமான உணர்வைத் தெரிவிக்க முடியும் என்பதையும் எடுத்துக் கூறுகின்றன இந்த பொம்மைகள்.


இந்த பொம்மைகள் புவிஈர்ப்பு விசை செயல்பாட்டுக்கு ஏற்ப செங்குத்தாக எப்போதும் இருக்கும், இயங்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. ராஜா- ராணி பொம்மைகள், நடன மங்கை பொம்மைகள், தாத்தா- பாட்டி பொம்மைகள் என தற்போது விதவிதமான தலையாட்டி பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன.


கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் எனப் பல்வேறு கலைகளுக்குப் பெயர் பெற்ற தஞ்சாவூரில் 19-ம் நூற்றாண்டில்தான் இப்பொம்மைகள் முதலில் உருவாக்கப்பட்டன. சரபோஜி மகாராஜாவின் காலத்தில் இப்பொம்மைகளை உருவாக்கும் கலைஞர்கள் சிறப்பு பெற்று விளங்கினர். மற்றவர்களால் நன்கு மதிக்கப்பட்டனர்.


இப்பொம்மைகளில் முதலில் தயாரிக்கப்படுவது அடிப்பாகம்தான். இதற்கு வளைவான அடிப்பாகமுள்ள கிண்ணம் போன்ற ஒரு அமைப்பில் தூய களி மண்ணை நிரப்புகின்றனர். இது இரண்டு நாட்கள் நிழலிலும், இரண்டு நாட்கள் வெயிலிலும் உலரவைக்கப்படுகிறது. இவ்வாறு நிரப்பப்படும் களிமண்ணின் இறுக்கமான திடத் தன்மைக்கு ஏற்ப பொம்மைகள் சரியான நேர் செங்குத்து வாக்கில் அமைகின்றன. பின்னர், மேல்பாகம் தயாரிக்கப்பட்டு அடிப்பாகத்துடன் இணைக்கப்படுகிறது. தொடர்ந்து, உப்புத்தாளைக் கொண்டு நன்கு தேய்க்கப்பட்டு, கண்கவர் வண்ணம் அடிக்கப்பட்டு உலர வைக்கப்படுகின்றன.


அக்காலத்தில் களிமண்ணைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பொம்மைகள், தற்போது பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், காகிதக் கூழ், மரத் தூள் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகின்றன. உடல் பாகங்கள் தனித்தனியே உருவாக்கப்பட்டு ஒரு கம்பியில் பொருத்தப்பட்டு ஆடும்விதமாக உருவாக்கப்படும் பொம்மைகள் வகையில் ஆடும் மாது, தாத்தா- பாட்டி பொம்மைகளைக் கூறலாம். தற்போது பிளாஸ்டிக் கொண்டும் இந்த பொம்மைகள் தயாரித்து விற்கப்படுகின்றன.


மண் சார்ந்த பொருட்களுக்கான புவிசார் குறியீடு குறித்த 1999-ம் ஆண்டு சட்டத்தின்படி இந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூருக்கே உரித்தான ஒன்று என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.


Comments