ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படுபவர்கள் மத்தியில் இன்று பலரும் உணவை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். உணவை வீணடிப்பது என்பது மிகப்பெரிய பாவமாக சாஸ்திரம் கூறுகிறது. இதற்கு மிகச் சரியான சான்றாக வள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு கதை விரிகிறது. வள்ளுவர் மனைவியாகிய வாசுகி உணவு பரிமாறும் பொழுது வள்ளுவர் தன் மனைவியிடம் ஒரு ஊசியும், சிறிதளவு தண்ணீரும் கேட்பாராம். ஒரு பருக்கை கீழே சிந்தி விட்டாலும் ஊசியால் அதை எடுத்து நீரினால் கழுவி மீண்டும் அதை எடுத்து சாப்பாட்டில் போட்டு சாப்பிடுவாராம். ஒரே ஒரு பருக்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இக்கதை அமைந்துள்ளது அல்லவா?
இதிலிருந்தே உணவின் முக்கியத்துவத்தை நாம் நன்றாக உணர வேண்டும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாதத்தை இரவில் வீணாக பலரும் கொட்டி விடுகின்றனர். இது மிகவும் தவறான ஒரு விஷயமாகும். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் வறுமை உண்டாகும். செல்வ வளம் குறையும். இரவில் மீறும் சாதத்தை என்ன செய்வது என்று இப்பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பெண்களிடம் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு அம்சமாக சமையல் கலை உள்ளது. ஆனால் இப்போது பெண்களை விட ஆண்களே சுவையாகவும், சிறப்பாகவும் சமைக்கின்றனர். அனைவருக்கும் சமையல் கலை எளிதில் வந்து விடுவதில்லை. அதில் ஆர்வமும், அன்பும் நிறைந்திருக்க வேண்டும். யாருக்காக சமைக்கிறோம் என்பதை விட, அன்ன பூரணியை மனதில் நினைத்து சமைக்கும் உணவு ஆரோக்கியமாகவும், சுவையாகவும் இருக்க வேண்டி பலரின் வயிற்றை நிரப்பும் எண்ணத்துடன் முக மலர்ச்சியுடன் சமைக்க வேண்டும்.
சமைத்த சாதத்தை வீணாக்காமல் சமைக்க முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனோ தானோவென்று சமைக்காமல் எத்தனை பேர் இருக்கின்றனர்? எவ்வளவு அழக்கு அரிசி போட்டால் சரியாக இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சிலர் குறைவாக இருந்தாலும் சரி, ஆனால் சாதம் வீணாக போய்விடக் கூடாது என்று சமைக்கின்றனர். ஆனால் இன்னும் சிலர் வீணாகப் போனாலும் சரி, ஆனால் பற்றாக்குறை வந்துவிடக் கூடாது என்று நினைத்து சமைக்கின்றனர். இந்த இரண்டில் எது சரி? என்று வாதம் செய்து பார்த்தால், இரண்டிற்கும் சமமாக பதில்கள் கிடைக்கும். ஆனால் சாஸ்திரப்படி முதல் விஷயமே சரியாக உள்ளது. சாதம் குறைவாக சாப்பிடுவது அறிவியல் ரீதியாகவும் உடலுக்கு நன்மை பயப்பது தான். ஆன்மீக ரீதியாக பார்க்கப் போனால் அன்னபூரணிக்கு மரியாதை அளிப்பது போல் இந்த விஷயம் அமைந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எவ்வளவு முறை முயற்சித்தும் சிலருக்கு சரியாக சாதம் வடிக்க தெரியாது. அதிகமாகவே வடித்து விடுகின்றனர். இவர்களைப் போன்றவர்கள் அந்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி மறுநாள் உபயோகிப்பது நலம் தரும். அல்லது பிரிட்ஜில் வைத்து மறுநாள் தண்ணீர் ஊறறி சூடு செய்தபின் வடித்து பயன்படுத்தி விடலாம். அதை விடுத்து அதை வீணாகக் குப்பையில் கொட்டுவது மிகவும் பாவமான செயலாகும். அதேபோல் சாதம் செய்யும் பானையில், சாதம் தீர்ந்ததும் நன்றாக வழித்து எடுத்து விடக்கூடாது. இதுவும் சாஸ்திரப்படி தவறான செயலாகும். சிறிதளவேனும் பானையில் சாதம் எப்போதும் இருக்க வேண்டும். இரவில் சாத பானையை கழுவ போடுவதற்கு முன் சிறிதளவு சாதத்தை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.
இதனை பூஜை அறையில் அல்லது சமையல் அறையில் வைத்து விடுங்கள். மறுநாள் இதேபோல் செய்து பழைய சாதத்தை கொட்டி விடலாம். எப்போதும் வீட்டில் சாதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே குடும்பத்திற்கு நல்லது. உங்கள் சந்ததியினரும் வறுமை இன்றி வளமாக வாழ்வதற்கு துணைசெய்யும். சாப்பாட்டு பானையில் சாதத்தை சுத்தமாக வழித்து எடுத்துவிட்டு கழுவும் பழக்கத்தை நீங்கள் கொண்டிருந்தால் கட்டாயம் இன்றோடு விட்டுவிடுங்கள். இவ்வாறு செய்வது அன்னபூரணியை அவமதிப்பது போன்றது. எனவே மேற்கூறியபடி சிறிதளவு சாதத்தை எடுத்து வைத்துவிட்டு பின்னர் கழுவிக் கொள்ளுங்கள் தவறில்லை.
Comments
Post a Comment