குகையே கோயில்... இது தோரணமலை அழகு! வீட்டில் இருந்தே வணங்குங்கள் வேலவனை!


குகையே கோயில்... இது தோரணமலை அழகு!  வீட்டில் இருந்தே வணங்குங்கள் வேலவனை! 


murugan


தென்காசிக்கு அருகில், கடையத்துக்கு அருகில் உள்ளது தோரணமலை. இங்கு அழகே வடிவெனக் கொண்ட முருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் அற்புதமாகக் காட்சி தருகிறான்.
சிலபல வருடங்களுக்கு முன்பு வரை, பாதைகள் சரிவர இல்லாமல் இருந்தன. இப்போது பாறைகளை வெட்டி, படிகளாக்கியிருக்கிறார்கள். ஆனாலும் குழந்தைகளையும் முதியவர்களையும் கவனத்துடன் அழைத்துச் செல்லவேண்டும்.



படிகளைக் கடந்தால், பரமேஸ்வரனின் மைந்தன் வசிக்கும் அற்புதக் குகை. அதுவே கோயில், அதுவே சந்நிதி. அதுவே கருவறை. கிழக்கு நோக்கிய முருகன். ஞானகுருவென தேஜஸூடன் காட்சி தருகிறான். கையில் வேலும் அருகில் மயிலும் இருக்க... நமக்கென்ன பயம்... சொல்லுங்கள்!



தோரணமலைக்கு அருகில் உள்ளது முத்துமாலை புரம் எனும் கிராமம். அங்கே வாழ்ந்த ஒருவரின் கனவில், மலையின் மேலே சுனை இருக்கிறது. அந்தச் சுனைக்கு உள்ளே முருகன் சிலை இருக்கிறது. அதை எடுத்து வந்து, அருகில் உள்ள குகைக்குள் வைத்து வழிபடு. இந்த ஊரும் விவசாயமும் செழிக்கும்’ என அசரீரி கேட்டதாம்! அதன்படி சுனையின் ஆழத்தில்... முருகன் விக்கிரகம் கிடைக்க, குகைக்குள் வைத்துப் பிரதிஷ்டை செய்தார்கள். அன்று முதல் வழிபடத் தொடங்கினார்கள்.


திருக்கயிலையில் நிகழ்ந்த சிவ - பார்வதி திருக்கல்யாணமும் அப்போது, தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவரும் கயிலையில் கூடிவிட, பூமியின் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. என்பதெல்லாம் தெரியும்தானே! அப்போது பூமியைச் சமப்படுத்த சிவபெருமான், அகத்தியரை பொதிகைக்கு அனுப்பி வைத்தார். மலையின் சாந்நித்தியத்தால் அகத்தியர் இங்கே சில காலம் தங்கி தவமிருந்தார் என்கிறது ஸ்தல புராணம்! இத்தனை பெருமை வாய்ந்த தோரணமலைக்கு, ராமபிரானும் வந்து, தவம் புரிந்தார் என்று தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.


மகாகவி பாரதியாரின் துணைவியாருக்கு கடையம்தான் சொந்த ஊர் என்பார்கள். பாரதியார், இங்கே கடையத்துக்கு வரும் போதெல்லாம், இந்ததோ  மீது ஏறி, குகையின் அழகனைக் கண்டு சிலிர்த்தார். ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று பாடினார்.


குகை அழகனுக்கு, தினமும் உச்சிகால பூஜை விமரிசையாக நடைபெறுகிறது. தைப்பூசமும் வைகாசி விசாகமும் பங்குனி உத்திரமும் சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. மாதந்தோறும் தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் விசேஷ பூஜைகளும் அபிஷேகங்களும் விமரிசையாக நடக்கின்றன.





தோரணமலைக்கு வந்து முருகக் கடவுளை, வணங்கிப் பிரார்த்தனை செய்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நிகழும்.சந்தான பாக்கியம் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கச் செய்வார். நம் துயரங்களையெல்லாம் போக்கி அருள்வார் கந்தவேலன் என்கின்றனர்.





தோரணமலை நாயகனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டிலிருந்தே வேண்டிக்கொள்ளுங்கள். நல்லதையெல்லாம் தந்தருள்வார் அழகன் வடிவேலன்!


Comments