கடற்கரை மணலெடுத்து வந்து வேண்டிக்கொண்டால், நினைத்ததையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் உவரி சுயம்புலிங்கம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது உவரி கிராமம். தூத்துக்குடி- & கன்யாகுமரி சாலையில் (இ.சி.ஆர்), தூத்துக்குடியில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரில் இருந்து 38 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் உள்ளது உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி கோயில். செந்தூரின் கடலோரத்தில் பிள்ளையும் உவரி கடற்கரையில் தந்தையுமாக அருளாட்சி நடத்துகின்றனர்!
அந்தக்காலத்தில் பால், மோர், தயிர் ஆகியவற்றை பானைகளில் வைத்து, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, தலையில் சுமந்தபடி விற்று வந்தனர் யாதவ குல மக்கள். அவர்களில் ஒரு மூதாட்டி, ஒருநாள் அந்தக் கடம்பமர வேருக்கு அருகில் அமர்ந்து, அழுதுகொண்டிருந்தாள். ‘என்ன பொழப்பு இது! தினமும் பானைகளைச் சுமந்துக்கிட்டு, விக்கிறதுக்குக் கிளம்பினா, கடம்பவேர் தடுக்கி விழுந்து, பானை உடைஞ்சு, பாலும் மோரும் தரையில ஆறாட்டம் ஓடுறதே வேலையாப் போச்சு! காலம் போன காலத்துல கண்ணும் தெரியலை, மண்ணும் தெரியலை எனக்கு!’ என்று புலம்பினாள். வெறுங்கையுடன் வீடு திரும்பினாள்.
விவரம் அறிந்து ஆவேசமான அவளின் கணவர், அந்த கடம்ப மரம் அருகில் வந்தார். ‘உன்னோட அடிவேர் கூட இருக்கக்கூடாது! இதோ... உன்னை அழிக்கிறேன், பார்’ என்று அரிவாளால் அடிவேர்ப் பகுதியில் வெட்டினார். அவ்வளவுதான்... அங்கிருந்து குபுக்கென்று கிளம்பி, பீறிட்டு அடித்தது ரத்தம். இதில் அரண்டு போனவர், தலைதெறிக்க ஓடி, ஊர்ப் பெரியவரிடம் விவரத்தைத் தெரிவித்தார். பீதியுடன் ஊரே திரண்டது.
அப்போது ஊர்ப் பெரியவருக்கு அருள்வாக்கு வந்தது. ‘வந்திருக்கறது சிவன். லிங்கமா, சுயம்புவா நமக்காக வந்திருக்காரு. உடனே சந்தனத்தை அரைச்சு, ரத்தம் வர்ற இடத்துல தடவுங்க. சரியாயிடும்!’ என்று சொல்லி, தென்னையும் பனையும் சூழ்ந்த இடத்தில், சந்தன மரத்தையும் காட்டியருளினார். பிறகு, சந்தனம் அரைத்துப் பூசியதும், ரத்தம் வழிவது நின்றது. அதையடுத்து அங்கேயே சிறிய கூரை வேய்ந்து, கோயிலாக்கி வழிபடத் துவங்கினார்கள்! அந்த ஊர்ப் பெரியவரே கோயிலின் தர்மகர்த்தாவாக இருந்து, கோயிலை வளரச் செய்தார். பிறகு, மண்டபம் கட்டி, சந்நிதி அமைத்து, ஆலயம் உருவானதாம்!
கடலில் குளித்துவிட்டு, அருகில் உள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி (கிணற்றிலும் நீராடுகின்றனர்), ஸ்ரீகன்னி விநாயகரை வணங்கி, ஸ்ரீசுயம்பு லிங்கத்தை வேண்டினால், சகல பிரச்னைகளும் பறந்தோடும். சந்தோஷமும் நிம்மதியுமாக வாழலாம்.
கோயிலுக்குப் பின்னே, ஸ்ரீபூரணை - புஷ்கலையுடன் உள்ள ஸ்ரீவன்னியடி சாஸ்தா காட்சி தருகிறார். இவருக்கு, பொங்கல் படையலிட்டுப் பிரார்த்திக்கின்றனர், பக்தர்கள்.
இங்கே, அம்பாளுக்குச் சந்நிதி இல்லை. ஆனால், அவளின் இன்னொரு வடிவமாக கிராம தேவதை ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் சந்நிதி கொண்டிருக்கிறாள். இவளுக்கு, மஞ்சள் அல்லது குங்கும அபிஷேகம் செய்து வழிபட்டால், வீடு- வாசலுடன் இல்லறத்தைச் சிறக்கச் செய்வாள் என்பது ஐதீகம்.
‘’உடன்குடிதான் சொந்த ஊர். எங்களுக்கு இஷ்ட தெய்வம், காவல் தெய்வம் எல்லாமே சுயம்பு சாமிதான். சக்தி வாய்ந்தவர் இவர். சென்னைக்குப் போய் பல வருஷமாகிட்டாலும், எப்பத் தோணுதோ அப்பல்லாம் இங்கே ஓடி வந்துடுவேன்’’ எனச் சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.
கடலில் இருந்து மணலை எடுத்து வந்து, கரையில் குவியலாக்கிவிட்டு, சிவனாரை வணங்குகின்றனர் (தங்கள் வேண்டுதலுக்கேற்ப 11 முறை 108 முறை என மணல் பெட்டி சுமக்கின்றனர்). வேண்டுதல் நிறைவேறியதும், சுயம்புலிங்க ஸ்வாமிக்கு பால், தேன் மற்றும் சந்தனத்தால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
அதேபோல், வீட்டில் எவரேனும் பிரச்னையில் சிக்கியுள்ளார் அல்லது தீராத நோயால் அவதிப்படுகிறார் என்றால், உடனே அவரை இங்கு அழைத்து வந்து, சுயம்புலிங்கமூர்த்தியின் பிள்ளையாக அறிவித்து, ‘உன் புள்ளையை நீதான் காக்கணும்’ என்று வேண்டுகின்றனர். நோய் தீர்ந்ததும், தங்களால் இயன்ற தொகையை ‘பிடிபணம்’ எனச் செலுத்தி, நேர்த்திக் கடனை அடைக்கின்றனர். இந்தப் ‘பிடிபணம்’ நேர்த்திக் கடன் சம்பிரதாயம் வந்ததற்கு ஒரு சுவையான கதையும் சொல்கிறார்கள்!
குமரி மாவட்டத்தில் உள்ள ஆயர் குலத்தோர், அந்தக் காலத்தில் இங்கு நடந்தே வந்து தரிசிப்பார்கள். அப்போது வழியில், ஒரு தென்னந்தோப்பில் தங்கி இளைப்பாறுவார்கள். ஒருமுறை, அந்தத் தோப்பின் உரிமையாளர் கடும் நோயால் அவதிப்பட்டார். இளைப்பாறியவர்கள், ‘எங்க சுயம்புலிங்க சாமி, உன்னைக் கைவிட மாட்டாரு’ எனச் சொல்லிவிட்டு, உவரிக்கு வந்து தரிசனம் முடித்து, விபூதி பிரசாதத்துடன் தோப்புக்குச் செல்ல, பூரணமாகக் குணமாகி இருந்தாராம் அவர். சுயம்புலிங்க ஸ்வாமியின் அருளை நினைத்து, நெகிழ்ந்தவர், உவரி தலத்துக்கு வந்து, நாணயம் காணிக்கை (திருவிதாங்கூர் நாணயம்) தந்து, வணங்கினாராம். அன்று முதல், ‘பிடிபணம்’ எனும் நேர்த்திக்கடன் நடைமுறைக்கு வந்ததாம்!
சுயம்பு மூர்த்தமாக, கடம்ப வேரின் அடியில் இருந்து வெளிப்படும்போது, சந்தனம் பூசப்பட்டது அல்லவா! எனவே, இன்றைக்கும் இங்கு வரும் பக்தர்களுக்கு (கோயிலுக்குள் சட்டை அணியக்கூடாது), கட்டையில் அரைக்கப்பட்ட சந்தனப் பிரசாதம் தரப்படுகிறது. இந்தச் சந்தனத்தை உடலில் பூசிக்கொள்ள, சகல நோய்களும் தோஷங்களும் விலகும்!
உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமியைத் தரிசித்து, சந்தனத்தை உடலில் மணக்க மணக்கப் பூசிக் கொண்டு, கடல் காற்றை அனுபவிக்கும்போது, கவலையாவது துக்கமாவது... எல்லாம் காற்றோடு காற்றாகக் கலந்துவிடும் என்பது உறுதி!
Comments
Post a Comment