சிக்கல்கள் தீர்க்கும் பிரதோஷம்; வீட்டில் விளக்கேற்றுங்கள்


pradhosham


பிரதோஷ நாளில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். வாழ்வின் சிக்கல்களெல்லாம் தீர்த்துவைப்பார் தென்னாடுடைய சிவனார். கஷ்டங்களையெல்லாம் போக்குவார் பரமேஸ்வரன்.


ஒவ்வொரு அமாவாசைக்கு மூன்று நாட்கள் முன்னதாகவும் பெளர்ணமிக்கு மூன்று நாட்கள் முன்னதாகவும் பிரதோஷகாலம் வரும். பிரதோஷம் என்பது சிவபெருமானுக்கு உகந்த, சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த மிக முக்கியமான நாள்.


மாதந்தோறும் வரும் சிவராத்திரி நாளில் விரதம் மேற்கொண்டு சிவ தரிசனம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். அந்தநாளில், சிவ பாராயணம் செய்து பிரார்த்தனை செய்வார்கள். அதேபோல, மாதந்தோறும் வருகிற இரண்டு பிரதோஷத்தின் போதும் சிவ வழிபாடு  செய்வார்கள். சிவாலயத்துக்குச் சென்று தரிசிப்பார்கள்.


பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள நேரம். இந்த நேரத்தில், சிவனாருக்கு எந்த அளவுக்கு அபிஷேகமும் ஆராதனைகளும் அமர்க்களப்படுமோ... அதேபோல் நந்திதேவருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். 16 வகையான அபிஷேகங்களுக்கான பொருட்களை பக்தர்களே வழங்குவார்கள்.



அப்போது நந்திதேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெறும். அப்போது நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்துவார்கள். சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.


இன்று பிரதோஷம். இந்த அற்புதமான நாளில், மாலையில் வீட்டில் விளக்கேற்றுங்கள். சிவ நாமங்களைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். முடிந்தால், சிவனாருக்கு வில்வம் சார்த்துங்கள். தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள்.


சிக்கல்களையெல்லாம் தீர்த்து வைப்பார் சிவனார். கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போகும்.


Comments