நம் சங்கடங்களெல்லாம் தீரட்டும் - சங்கடஹர சதுர்த்தி


vinayagar


நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்து வைக்கும் விநாயகப் பெருமானை வீட்டிலிருந்தே வழிபடுங்கள். சங்கடங்கள் நீங்கி, சந்தோஷங்களை பெருகச் செய்வார் கணபதி.


மாதந்தோறும் சிவனாருக்கு சிவராத்திரி வரும். பெருமாளுக்கு ஏகாதசி வரும். முருகனுக்கு சஷ்டி உண்டு. இந்தநாட்களில் அந்தந்த இறைவனை வணங்கச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். இதேபோல், தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்குவோம். வளர்பிறை பஞ்சமியில் வாராஹிதேவியை வழிபடுவோம்.


முதற்கடவுளான விநாயகப் பெருமானுக்கு உரிய நாளாக, தேய்பிறையில் வரும் சதுர்த்தசி, சங்கடஹர சதுர்த்தி எனப் போற்றப்படுகிறது. இந்தநாள், விநாயகப் பெருமானை ஆராதிக்கவேண்டிய நன்னாள். எந்த இறைவனை வழிபடுவதாக இருந்தாலும் முன்னதாக, முதலாவதாக கணபதியை தொழுவது வழக்கம்.


அப்படியிருக்க, விநாயகப் பெருமானுக்கு உரிய நன்னாளில் அவரை ஆத்மார்த்தமாக வணங்குவோம். வீட்டில் விளக்கேற்றுங்கள். முடிந்தால் அருகம்புல் கொண்டு மாலை சார்த்துவது சிறப்பு. வெள்ளெருக்கு மாலை சார்த்தி வழிபடுவது இன்னும் பல நன்மைகளைத் தந்தருளும்.


இந்தநாளில், ஆனைமுகத்தானை வழிபடுங்கள். மாலையில், ராகுகால வேளையான 4.30 முதல் 6 மணிக்குள் விநாயகருக்கு விளக்கேற்றுங்கள். முடிந்தால், சுண்டல் அல்லது கொழுக்கட்டை அல்லது பாயசம் என நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். முடிந்த அளவு, நைவேத்தியப் பிரசாதத்தை நான்குபேருக்கேனும் வழங்குங்கள்.


நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வார் ஆனைமுகத்தான். நமக்கு சந்தோஷங்களை அள்ளித்தருவார் பிள்ளையாரப்பன்!


Comments