தரித்திரம் நீக்கும்; ஞானத்தைத் தரும்; மங்கல காரியம் நடக்கும்! - மரங்களின் குணங்கள்... பலன்கள்!



virutcham


அத்திமரம்:
அத்தி மரம் தத்தாத்திரேயர் அம்சன் என்று விவரிக்கிறது புராணம். மேலும் அத்தி மரத்தில் மகாவிஷ்ணுவும் குடியிருந்து கோலோச்சுகிறார். இந்த மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணத்தைத் தரவல்லவை. மனதில் அமைதியையும் நிம்மதியையும் கொடுக்கவல்லவை. அத்தி மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக கைகூடும் என்று சொல்லிவைத்திருக்கிறார்கள், ஞானியரும் யோகியரும்!


வில்வமரம்:
வில்வமரம் சிவ அம்சம். இந்த மரத்தின் இலைகளால் சிவபெருமானை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும் என்கிறது சிவபுராணம். மேலும் வில்வம் மகாலக்ஷ்மி வாசம் செய்யும் இலை என்பதால், வீட்டின் தரித்திரம் விலகும். இல்லத்தில் சுபிட்சம் குடிகொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.





துளசி:
துளசி விஷ்ணுவின் அம்சம். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா. பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார் என்கிறது புராணம். துளசியில் இருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


எவர் வீட்டில் துளசி  மாடம் வைத்து பூஜிக்கப்படுகிறதோ... அங்கே மகாலக்ஷ்மியும் மகாவிஷ்ணுவும் வாசம் செய்வார்கள் என்பது ஐதீகம். அந்த வீடு, லக்ஷ்மி கடாட்சத்துடன் திகழும்.


மாமரம்:
மாமரம் மகாலட்சுமியின் அம்சம். இந்த மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தபடுகின்றன. எந்தவொரு மங்கல காரியங்கள் நடந்தாலும் மாவிலைத் தோரணங்கள் வாசலில் கட்டப்பட்டிருந்தால், அந்த வீட்டில், மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும் என்பது ஐதீகம்.


சந்தன மரம்:
சந்தனமரம் விஷ்ணுவின் அம்சம் என விவரிக்கிறது புராணம். சந்தனம் நம் வீட்டில் நடக்கும் எல்லாச் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சந்தனத்தில் இருந்து வரும் நறுமணம் அந்த இடத்தையே தெய்வீக அதிர்வுகள் சூழும்.அந்த அதிர்வுகள், நல்ல நல்ல எண்ணங்களை ஏற்படுத்தும். மேலும் சந்தன நறுமணம், அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.



அரசமரம்:
அரசமரம் பிரம்மாவின் அம்சம். அரச மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இந்த மரத்தின் கீழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.


ஆலமரம்:
ஆலமரம் சிவபெருமானின் அம்சம். இந்த மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. ஆலமரத்தின் கீழே அமர்ந்து தியானம் செய்தால் ஞானமும் யோகமும் பெறலாம். சிவனருள் கிடைக்கப் பெறலாம்.


Comments